ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி சாம்பியன்
பாகிஸ்தான் கேப்டன் அப்பாஸ் அப்ரிடி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.;
image courtesy: twitter/@HongKongSixes
ஹாங்காங்,
ஹாங்காங் சிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டி அங்குள்ள மோங்காக் நகரில் நடைபெற்றது. 6 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வீரர்கள் இடம் பெறுவார்கள். இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றிருந்தன.
லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் பாகிஸ்தான் மற்றும் குவைத் அணிகள் இறுதிபோட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குவைத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அப்பாஸ் அப்ரிடி 52 ரன்கள் அடித்தார். குவைத் தரப்பில் மீட் பவ்சார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய குவைத் அணி 5.1 ஓவர்களில் 92 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது.
குவைத் தரப்பில் அதிகபட்சமாக மீட் பவ்சார் 33 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் மாஸ் சதகத் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை அப்பாஸ் அப்ரிடி வென்றார்.