பும்ராவுக்கும் அந்த பாக். வீரருக்கும் இடையிலான ஆட்டத்தை காண ஆர்வமாக உள்ளேன் - இர்பான் பதான்
ஆசிய கோப்பையில் இன்று நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.;
கோப்புப்படம்
மும்பை,
ஆசிய கோப்பையில் இன்று நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு எதிராக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக பகார் ஜமான் எவ்வாறு விளையாடப்போகிறார்? என்பதை காண ஆவலாக காத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, கடந்த போட்டியின் போது பும்ரா மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்தார். அவருடைய கண்ட்ரோல் மற்றும் லைன் அன்ட் லென்த் என அனைத்துமே அற்புதமாக இருந்தது. அவருக்கு எந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக எவ்வாறு பந்துவீச வேண்டும்? என்பது நன்றாகவே தெரியும்.
எப்போதுமே அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போது ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளராக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார். அந்த வகையில் இந்த போட்டியிலும் அவர் அற்புதமாக பந்து வீசுவார் என்று நினைக்கிறேன். அதேபோன்று பகார் ஜமான் மிக வேகமாக ரன்களை குவித்து போட்டியை அதிரடியாக கொண்டு செல்லக்கூடிய திறமை படைத்தவர்.
எனவே இவ்விரு வீரர்களுக்கும் இடையேயான அந்த மோதல் எவ்வாறு இருக்கும்? என்பதை காண காத்திருக்கிறேன். அதேபோன்று பகார் ஜமானுக்கு எதிராக குல்தீப் யாதவ் நல்ல தாக்குதலை நிகழ்த்துவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஏற்கனவே பகார் ஜமானை ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை வீழ்த்தியுள்ளார். அதனால் அவர்களுக்கு இடையேயான மோதலும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.