ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்த ஆவலுடன் இருக்கிறேன்: சுப்மன் கில்

ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டுள்ளது;

Update:2025-10-10 06:32 IST

புதுடெல்லி,

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியின் கேப்டனாக சுப்மன் கில் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியையொட்டி டெல்லியில் நேற்று பேட்டி அளித்த சுப்மன் கில்லிடம், 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்குரிய திட்டத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி இருக்கிறார்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிச்சயமாக என பதில் அளித்தார். மேலும் கில் கூறியதாவது:-

ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மிகவும் அனுபவசாலிகள். இந்திய அணிக்காக அதிகமான போட்டிகளில் வென்று இருக்கிறார்கள். இவர்களை போல் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை தேடித்தந்த வீரர்கள் மிக குறைவே. இந்த அளவுக்கு அபரிமிதமான திறமையும், தரமும், அனுபவமும் கொண்ட வீரர்கள் உலக அளவில் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். அப்படிப்பட்ட வீரர்கள் நமது அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நெருக்கடியான சூழலில் பதற்றமின்றி அமைதியாக செயல்படுவது, வீரர்களுடன் நட்புறவை உருவாக்குவது போன்ற குணாதிசயங்களை ரோகித் சர்மாவிடம் இருந்து எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் நடுவே ஒரு நாள் போட்டி கேப்டன்ஷிப் குறித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் எனக்கு கேப்டன் பதவி வழங்கப்பட இருப்பது அதற்கு சற்று முன்பாகவே எனக்கு தெரியும். இது மிகப்பெரிய பொறுப்பு. டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஒரு நாள் வடிவிலான போட்டிக்கான இந்திய அணியையும் வழிநடத்த ஆவலுடன் இருக்கிறேன். அடுத்தடுத்த மாதங்களில் நாங்கள் எதிர்கொள்ள இருக்கும் அனைத்தையும் வெல்ல விரும்புகிறேன்.

இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது சவாலானது. ஆனால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடி சாதிக்க வேண்டும், ஐ.சி.சி. கோப்பைகளை வெல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன். இதை நான் செய்ய விரும்பினால், இத்தகைய சவால்களையும் சமாளித்தாக வேண்டும்.

இவ்வாறு சுப்மன் கில் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்