பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்ட போட்டி... பி.சி.சி.ஐ. மீது ரசிகர்கள் அதிருப்தி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.;
லக்னோ,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றிருந்தன.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாலையில் இருந்தே அங்கு பனிமூட்டம் பரவியதால் திட்டமிட்ட நேரத்தில் போட்டியை தொடங்க முடியவில்லை.
போக போக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அடர்த்தியான பனிமூட்டத்தால் அருகில் இருப்பவர்களை கூட தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனால் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத நடுவர்கள் நிலைமை சீரானதும் ஆட்டத்தை தொடங்கலாம் என்ற நோக்கில் அரைமணி நேரம் வீதம் தள்ளிவைத்துக் கொண்டே இருந்தனர்.
ஆடுகளத்தை நடுவர்கள் 6 முறை ஆய்வு செய்த பிறகும் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், போட்டி கைவிடப்பட்டது. மாலை 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க வேண்டும். ஆனால் இரவு 9.25 மணி வரை நடுவர்கள் ஆட்டத்தை நடத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். கடைசியாக இரவு 9.30 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள், விளையாடுவதற்கு உகந்த சூழல் இல்லை என்று கூறி ஆட்டத்தை ரத்து செய்தனர். இதனால் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
போட்டி கைவிடப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இந்த நேரத்தில் பனிமூட்டம் இருக்கும் என்பதால், அங்கு போட்டி அட்டவணை அமைத்தது தவறு என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், காற்றின் தரக் குறியீடு மோசமாக இருந்து வரும் வட மாநிலங்களில் போட்டியை நடத்தியது தவறு என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.