இங்கிலாந்து அணியின் திட்டத்தை தெரிந்து கொண்டு பேட்டிங் செய்தேன் - ரவி பிஷ்னோய்
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியின் முக்கியமான தருணத்தில் பிஷ்னோய் 9 ரன்கள் அடித்தார்.;
சென்னை,
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் மற்றும் வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், 3-வது வரிசையில் களம் கண்டு கடைசி வரை நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய திலக் வர்மா அணியை கரைசேர்த்தார். 19.2 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு முக்கியமான தருணத்தில் ரவி பிஷ்னோய் 9* ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார்.
இந்நிலையில் தம்மை அவுட்டாக்க இங்கிலாந்து போட்ட திட்டத்தை தெரிந்து விளையாடியதாக ரவி பிஷ்னோய் கூறியுள்ளார். மேலும் அவர் தங்களைப் போன்ற பவுலர்களும் பேட்டிங்கில் அசத்த முடியும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "தேவையற்ற ஷாட்டுகளை அடிக்காமல் ஸ்ட்ரைக்கை திலக் வர்மாவுக்கு கொடுப்பதே என்னுடைய வேலையாக இருந்தது. ஸ்லிப் பகுதிக்கு பீல்டர் வந்ததும் இங்கிலாந்து என்னை லெக் ஸ்பின் வைத்து அவுட் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. அதனால் கவர்ஸ் திசைக்கு மேலே அடிக்க முயற்சித்தபோது அதிர்ஷ்டவசமாக எனக்கு பவுண்டரி கிடைத்தது.
திலக் விளையாடியது ஒரு சிறந்த டி20 இன்னிங்ஸ். எதிரணியில் பெரிய பவுலர்கள் இருந்த சூழ்நிலையில் எதிர்ப்புறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. 2 - 3 மாதங்களாகவே அவர் நன்றாக செயல்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்காவில் இரண்டு சதங்கள் அடித்த அவர் உள்ளூரிலும் அசத்தி வந்ததால் இப்படி விளையாடுவார் என்பது எங்களுக்கு தெரியும். தற்போது அவர் பெரியதாக அசத்தி வருகிறார்" என்று கூறினார்.