விராட், ரோகித் இருந்திருந்தால் மட்டும் தென் ஆப்பிரிக்க தொடரில்... - கவாஸ்கர் விமர்சனம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்காக தலைமை பயிற்சியாளர் கம்பீரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.;
மும்பை,
கவுகாத்தியில் நேற்று முன்தினம் முடிவடைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 408 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை முழுமையாக பறிகொடுத்தது. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோற்று இருந்தது. ஒரு ஆண்டுக்குள் மீண்டும் இந்திய அணி உள்ளூரில் டெஸ்ட் தொடரை இழந்து பேரதிர்ச்சி அளித்துள்ளது.
அந்த தோல்விக்கு அடிக்கடி மாற்றங்கள் மற்றும் தவறான தேர்வுகளை செய்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முக்கிய காரணமானதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதனால் கம்பீர் பதவி விலக வேண்டும் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இருந்திருந்தால் இந்தியா 2வது ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்திருக்காது என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் விராட் கோலி ஓய்விலிருந்து திரும்பி வந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா இருந்திருந்தால் மட்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வென்றிருக்குமா? என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் அவர்கள் இருந்த போதே நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 3 - 0 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆனதாக கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு: “இல்லை. ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவு அவர்களின் சொந்த முடிவாக இருந்திருக்க வேண்டும். அநேகமாக, உங்களுடைய வருங்காலத்தைப் பற்றி முடிவெடுங்கள் என்று விராட் கோலி, ரோகித் சர்மாவிடம் தேர்வாளர்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் இங்கே இருந்திருந்தால், நாம் வென்றிருப்போம் என்று சொல்ல முடியாது.
ஏனெனில் நாம் நியூசிலாந்திடம் தோற்றபோது அவர்கள் இங்கே இருந்தார்கள். அவர்கள் அங்கு இருந்தபோது என்ன நடந்தது? நாம் 0-3 என்ற கணக்கில் தோற்றோம், இல்லையா? பிறகு ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது? நாம் இந்த வழிகளில் சிந்திக்கக்கூடாது. அதை விட்டுவிட்டு நாங்கள் அவர்களை ஓய்வை நோக்கி தள்ளினோம் என்று சிந்திக்கக்கூடாது. அப்படி சிந்திப்பது தவறான அணுகுமுறையாகும்” என்று கூறினார்.
கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் ஆடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.