பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்: ரூ.3.20 கோடிக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா
5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறி வைத்து ஏலம் கேட்டனர்.;
புதுடெல்லி,
4-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பை மற்றும் வதோதராவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறி வைத்து ஏலம் கேட்டனர்.
சமீபத்தில் நடந்த 50 ஓவர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகி விருது பெற்ற இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவை வாங்க அதிக போட்டி நிலவியது. ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த அவரை வாங்க டெல்லி அணி கடைசி வரை மல்லுக்கட்டிய நிலையில் உ.பி.வாரியர்ஸ் ஏற்கனவே தங்கள் அணிக்காக ஆடிய தீப்தி ஷர்மாவை ஆர்.டி.எம். கார்டு என்னும் சிறப்பு சலுகையை பயன்படுத்தி ரூ.3.20 கோடிக்கு தங்கள் வசப்படுத்தியது. இதன் மூலம் பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன 2-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலி கெர் ரூ.3 கோடிக்கு ஏலம் போனார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டித் தூக்கியது. இந்திய ஆல்-ரவுண்டர் ஷிகா பாண்டேவை ரூ.2.40 கோடிக்கு உ.பி.வாரியர்ஸ் அணியும், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் சோபி டிவைனை ரூ.2 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்சும், ஆஸ்திரேலிய பேட்டர் மெக் லானிங்கை ரூ.1.90 கோடிக்கு உ.பி.வாரியர்சும், இந்திய ஆல்-ரவுண்டர் ஸ்ரீ சரனி, வெஸ்ட்இண்டீஸ் பேட்டர் சின்லி ஹென்றி ஆகியோரை தலா ரூ.1.30 கோடிக்கும், தென்ஆப்பிரிக்க தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட்டை ரூ.1.10 கோடிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் தங்கள் படையில் இணைத்தது.
முன்னணி வீராங்கனைகளான அலிஸ் கேப்சி (இங்கிலாந்து), அலிசா ஹீலி, அலனா கிங், லாரா ஹாரிஸ் (மூவரும் ஆஸ்திரேலியா), ஹீதர் நைட், அமி ஜோன்ஸ் (இருவரும் இங்கிலாந்து) உள்ளிட்டோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.