இறுதிப்போட்டியில் அது மட்டும் நடந்தால் விராட் கோலியை... - ஏபி டி வில்லியர்ஸ்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
அகமதாபாத்,
18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
ஐ.பி.எல். தொடரின் அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக விளையாடி வரும் பெங்களூரு அணி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்துமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற்றால் விராட் கோலியை கட்டி அணைத்து கொண்டாட வேண்டும் என்று ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். மேலும் இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் எப்படியாவது மைதானத்திற்கு ஓடி சென்று விராட் கோலியை கட்டி அணைத்து அந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்" என கூறினார்.