சர்வதேச டி20 கிரிக்கெட்: முதல் இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்
8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
அபுதாபி,
8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில், அபுதாபியில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 56 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓமன் அணி களம் கண்டது. ஓமனின் தொடக்க வீரர்களாக ஜதிந்தர் சிங் மற்றும் ஆமிர் கலீம் களம் கண்டனர். இதில் ஜதிந்தர் சிங் 32 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஹம்மாத் மிர்சா களம் கண்டார். ஹம்மாத் மிர்சா - ஆமிர் கலீம் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.
அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஆமிர் கலீம் 64 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் ஓமன் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 21 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டை எடுத்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார்.