ஐ.பி.எல் 2025: ஏலத்தில் விலை போகாதது குறித்து உமேஷ் யாதவ் கவலை
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வரும் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.;
Image Courtesy: PTI
புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வரும் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( கடந்த நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
ஆனால் இந்த ஏலத்தில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை எந்த அணியும் எடுக்கவில்லை. சமீப காலங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் 2023 ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியில் நன்றாக பவுலிங் செய்தார். ஆனால் கடந்த ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியில் அவர் சுமாராகவே பவுலிங் செய்தார். அதன் காரணமாக 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை.
இந்நிலையில், ஐ.பி.எல் ஏலத்தில் தம்மை எந்த அணியும் வாங்காதது ஏமாற்றமளிப்பதாக உமேஷ் யாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த வருட ஐ.பி.எல் தொடரில் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். 15 வருடங்களாக விளையாடிய எனக்கு அது ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்?. ஆம். அதற்காக நான் சோகமாக உணர்கிறேன். சுமார் 150 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய நீங்கள் தேர்வு செய்யப்படாமல் போனால் அப்படித்தான் இருக்கும்.
இருப்பினும் அது ஐ.பி.எல் அணிகளின் திட்டங்களைப் பொறுத்தது. என்னுடைய பெயர் ஏலத்தின் கடைசி நேரத்தில் தான் வந்ததால் ஐ.பி.எல் அணிகளிடம் போதுமான பணம் இல்லாமல் இருந்திருக்கலாம். இறுதியில் ஏலத்தில் வாங்கப்படாததால் நான் விரக்தியை சந்தித்தேன். இருப்பினும் பரவாயில்லை. நான் எந்த முடிவையும் மாற்ற முடியாது.
காயத்துக்காக நான் காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். என்னால் முடியும் என்று உணரும் வரை 140 கிலோ மீட்டர் வேகத்தில் பவுலிங் செல்வேன். என்னால் முடியாத போது கிரிக்கெட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் எனக்கு நானே விலகிக் கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.