ஐ.பி.எல். மினி ஏலம்: ரூ.25.20 கோடிக்கு போன கேமரூன் கிரீனுக்கு எவ்வளவு கிடைக்கும்..?

Update:2025-12-16 21:01 IST

மும்பை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் விளங்கினார்.

இந்த நிலையில், ஏலத்தில் கேமரூன் கிரினின் பெயர் வந்தபோது, அவரை வாங்க பல அணிகள் போட்டியிட்டன. குறிப்பாக, சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஏலத்தில் அவரை வாங்க சென்னை அணி ரூ.25 கோடி வரை சென்றது.

ஆனால் இறுதியில், கேமரூன் கிரீனை 25.20 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை கேமரூன் கிரீன் படைத்தார்.

ஏலத்திற்கு முன்பாக எதிர்பார்த்தது போலவே கேமரூன் கிரீன் 25 கோடிக்கு மேல் சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அவரது ஏல தொகையான ரூ.25.20 கோடியும் முழுமையாக கிடைக்காது.

இதற்கான காரனம் என்னவெனில், மினி ஏலத்திற்கு என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வகுத்துள்ள புதிய விதிமுறைப்படி வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டும் கட்டணத்தில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்ச தக்கவைப்பு தொகை (ரூ.18 கோடி) அல்லது முந்தைய மெகா ஏலத்தில் அதிகபட்ச ஏலம் போன வீரரின் தொகை (ரிஷப் பண்ட் ரூ.27 கோடி) இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

அதன்படி, மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டிருந்தாலும் அவருக்கு ரூ.18 கோடி மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள ரூ.7.20 கோடிகிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் நலநிதிக்கு பயன்படுத்தப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்