ஐ.பி.எல்.2025: இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்..? சேவாக் கணிப்பு

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.;

Update:2025-06-02 21:26 IST

மும்பை,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரரான சேவாக் தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் சேவாக் பேசியது பின்வருமாறு:- "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். நான் ஆதரிக்கும் அணி தோல்வியடைவதைக் கண்டதால், எனது பழைய பார்முக்கு திரும்ப முடிவு செய்துள்ளேன். ஏனெனில் மும்பைக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் என்று கணித்தேன். ஆனால் தோல்வியடைந்தது. அதுபோக ஆர்சிபி அணிக்கு எதிரான தகுதி சுற்று 1-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியாக இருந்தாலும் சரி, தகுதி சுற்று 2-ல் மும்பை அணியாக இருந்தாலும் சரி நான் ஆதரிக்கும் அணிகள் தோல்வியடைந்தன" என்று கூறினார்.

இந்த பதிலால் குழப்பமடைந்த தொகுப்பாளர் சேவாக்கிடம், "நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்?" என்று மீண்டும் கேட்டார்.

அதற்கு சேவாக் மீண்டும் 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு' என்று பதிலளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்