ஐ.பி.எல். 2026: மினி ஏலத்தில் எத்தனை தமிழக வீரர்களுக்கு இடம்..?
ஐ.பி.எல். நிர்வாகம் இறுதி ஏலப்பட்டியலை நேற்று வெளியிட்டது.;
சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2026) மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. இதையொட்டி மொத்தம் 177 வீரர்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்டு, 71 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது 10 அணிகளுக்கும் சேர்த்து 31 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான ஐ.பி.எல். மினி ஏலம் அபுதாபியில் வருகிற 16-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.
ஏலத்துக்கு முதலில் 1,355 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். பிறகு அணி நிர்வாகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தென் ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக், ஜார்ஜ் லின்டே, இலங்கையின் துனித் வெல்லாலகே உள்பட 35 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். 1,390 பேர் அடங்கிய வீரர்களின் பட்டியல் 10 அணிகளுக்கும் அனுப்பப்பட்டு தங்களுக்கு விருப்பமான வீரர்கள் குறித்து கடந்த 5-ந் தேதிக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
10 அணிகளிடம் இருந்து கிடைத்த பட்டியலை ஆய்வு செய்த ஐ.பி.எல். நிர்வாகம் இறுதி ஏலப்பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி இறுதி ஏலப்பட்டியலில் மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 240 பேர் இந்தியர்கள், 110 பேர் வெளிநாட்டினர். இவர்களில் 224 இந்தியர் உள்பட 238 பேர் சர்வதேச போட்டியில் ஆடாதவர்கள். 112 வீரர்கள் சர்வதேச அனுபவம் பெற்றவர்கள்.
இந்த ஏலப்பட்டியலில் 11 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, டி.என்.பி.எல். மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அசத்திய துஷர் ரஹேஜா, அஜிதேஷ், ஜதாவேத் சுப்ரமணியன், சந்தீப் வாரியர், சஞ்சய் யாதவ், இசக்கிமுத்து, முகமது அலி, ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், ஆர்.ராஜ்குமார், சன்னி சந்து மற்றும் சோனு யாதவ் ஆகிய 11 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாகும். மற்றவர்களின் விலை ரூ.30 லட்சமாகும்.
தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர், சாய் சுதர்சன், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், எம்.சித்தார்த் ஆகியோர் அணிகளால் தக்கவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.