ஐ.பி.எல். மினி ஏலம்: 19-வயதே ஆன விக்கெட் கீப்பரை ரூ.14.20 கோடிக்கு வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்
முதல் வீரராக வந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்கை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை.;
image courtesy:PTI
image courtesy:PTI
அபுதாபி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். கடைசி நேரத்தில் மேலும் 19 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.மினி ஏலம் தற்போது தொடங்கியுள்ளது. ஏலத்தை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகிறார். இதில் முதல் வீரராக வந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்கை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை. இதனையடுத்து வந்த டேவிட் மில்லரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு டேல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை ஏலத்தில் வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுக்கட்டினர். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் விலகியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கோதாவில் குதித்தது. இவரை வாங்க சென்னை - கொல்கத்தா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இவரது விலை எகிறி கொண்டே சென்றது. இறுதியில் ரூ. 25.20 கோடிக்கு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஏலத்தில் தற்போது 45 நிமிடங்கள் இடைவெளி விடப்பட்டுள்ளது.
அன்கேப்டு சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இடம்பெற்றிருந்த யாஷ் ராஜ் மற்றும் விக்னேஷ் புதூரை ராஜஸ்தான் ராயல்சும், பிரஷாந்த் சோலங்கியை கொல்கத்தா அணியும் அவர்களது அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்கு வாங்கியுள்ளன.
இதே வரிசையில் இடம்பெற்றிருந்த வஹிதுல்லாஹ் ஜத்ரான், ஷிவம் சுக்லா, குமார் கார்த்திகேயா ஆகியோரை எந்த அணியும் வாங்கவில்லை. அதேபோல் கரண் சர்மாவையும் எந்த அணியும் சீண்டவில்லை.
அன்கேப்டு வேகப்பந்து வீச்சாளரான அசோக் சர்மாவை ரூ.90 லட்சத்துக்கு குஜராத் வாங்கியுள்ளது. அதேபோல் மற்றொரு அன்கேப்டு வேகப்பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகியை அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்கு கொல்கத்தா வாங்கியுள்ளது. இந்த வரிசையில் நமன் திவாரியை ரூ.1 கோடிக்கு லக்னோ வாங்கியுள்ளது.
ஆனால் ராஜ் லிம்பானி, சிமர்ஜீத் சிங், ஆகாஷ் மத்வால், ஆகியோரை யாரும் வாங்க முன்வரவில்லை.
தமிழக விக்கெட் கீப்பரான துஷார் ரஹேஜாவை எந்த அணியும் வாங்கவில்லை.
இளம் விக்கெட் கீப்பர்களான முகுல் சவுத்ரியை ரூ.2.60 கோடிக்கு லக்னோ அணியும், தேஜஸ்வி சிங்கை ரூ.3 கோடிக்கு கொல்கத்தா அணியும் வாங்கியுள்ளன. இருவரின் அடிப்படை விலை ரூ.30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்கேப்டு விக்கெட் கீப்பர்கள் செட்டில் இடம்பெற்றிருந்த 19 வயதே ஆன கார்த்திக் சர்மாவை ஏலத்தில் எடுக்க முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இவரது விலை ரூ.30 லட்சத்திலிருந்து உயர்ந்து கொண்டே சென்றது.
இறுதியில் ரூ.14.20 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கியுள்ளது. இதன் மூலம் அதிக தொகைக்கு ஏலம் போன அன்கேப்டு வீரர் என்ற பிரஷாந்த் வீரின் சாதனையை கார்த்திக் சர்மா சமன் செய்துள்ளார்.
பிரஷாந்த் வீரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதே ஏலத்தில்தான் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இளம் இந்திய வீரர்களான ருச்சித் அஹிர், சன்விர் சிங், கமலேஷ் நாகர்கோட்டி, தனுஷ் கோட்டியான் ஆகியோரை யாரும் வாங்கவில்லை.
அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இடம்பெற்றிருந்த இந்திய இளம் உள்ளூர் ஆல் ரவுண்டரான பிரஷாந்த் வீரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மாறி மாறி மல்லுக்கட்டின. இதனால் இவரது விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்றது. இறுதியில் அவரை ரூ.14.20 கோடி என்ற மலைக்க வைக்கும் தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன அன்கேப்டு வீரர் என்ற சாதனையை பிரஷாந்த் வீர் படைத்துள்ளார்.
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மஹிபால் லோமரர், எதன் டாம் ஆகிய அன்கேப்டு வீரர்களை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
தமிழக வீரரான விஷய் சங்கரை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை.