ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெறும் மைதானம் இதுவா..? வெளியான தகவல்
போர்ப்பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் 17-ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது.;
மும்பை,
இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்ததால் இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் போர்ப்பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என நேற்றிரவு அறிவித்தது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன.
13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. அதாவது பாதியில் ரத்தான பஞ்சாப்- டெல்லி இடையிலான லீக் ஆட்டமும் மறுபடியும் நடத்தப்பட உள்ளது. எஞ்சிய ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது. மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இரண்டு நாளில் இரு ஆட்டங்கள் இடம் பெறுகிறது. சென்னையில் நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மே 29-ந்தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ந்தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 1-ந்தேதி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ந்தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. முந்தைய அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் ஆட்டம் கூடுதலாக நகர்கிறது. பிளே-ஆப் ஆட்டத்திற்குரிய இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைகியா கூறியுள்ளார்.
இந்நிலையில் இறுதிப்போட்டி மற்றும் 2-தகுதி சுற்று ஆட்டங்களை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தகுதி சுற்று 1 மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்களுக்கான மைதானங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.