ஜூனியர் ஆசிய கோப்பை: சூர்யவன்ஷி மிரட்டல்.. யுஏஇ அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்த ஆட்டத்தில் 171 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.;

Update:2025-12-12 19:03 IST

image courtesy:twitter/@BCCI

துபாய்,

12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளான இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்தியா- யுஏஇ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக ஆடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி 171 ரன்களும், ஆரோன் ஜார்ஜ் மற்றும் விஹான் மல்ஹோத்ரா தலா 69 ரன்களும் அடித்தனர். யுஏஇ தரப்பில் யுக் சர்மா மற்றும் உதிஷ் சூரி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 434 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய யுஏஇ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் உதிஷ் சூரி (78 ரன்கள்) மற்றும் பிரித்வி மது (50 ரன்கள்) ஆகியோரின் அரைசதத்தால் அந்த அணி ஆல் அவுட் தோல்வியிலிருந்து தப்பியது.

50 ஓவர்கள் முடிவில் யுஏஇ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் இந்திய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்