ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதியது.;

Update:2025-12-12 17:33 IST

image courtesy:twitter/@ACCMedia1

துபாய்,

12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) துபாயில் இன்று தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளான இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- மலேசியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மலேசியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 345 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 177 ரன்களும், அகமது ஹுசைன் 132 ரன்களும் அடித்தனர். மலேசியா தரப்பில் சத்னகுமாரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 346 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய மலேசியா அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 48 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 297 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை அசத்தலாக தொடங்கி உள்ளது.

மலேசியா தரப்பில் ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கை தொடவில்லை. அதிகபட்சமாக முகமது அக்ரம் 9 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா மற்றும் முகமது சய்யாம் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். சமீர் மின்ஹாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்