கிடைத்த வாய்ப்பை கருண் நாயர் சரியாக பயன்படுத்தவில்லை - இர்பான் பதான் விமர்சனம்
டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் மோசமாக செயல்பட்டதாக தெரியவில்லை என இர்பான் பதான் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், ‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் மோசமாக செயல்பட்டதாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு தொடர்ந்து சீரான தொடக்கம் கிடைத்தபோதிலும், ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் அவருக்கு 2-வது வாய்ப்பு கொடுத்துள்ளது.
அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்டில் போட்டியை வென்று தர அற்புதமான வாய்ப்பு கிட்டியது. இருப்பினும் அவரால் அதை செய்ய முடியவில்லை. மேலும் நல்ல அடித்தளம் அமைத்து ஆடும்போது, திடீரென தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்துவிடுகிறார்.
ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் பவுன்சர் பந்து அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அது அவரை பதற்றம் அடைய செய்ததை பார்க்க முடிந்தது. அதனால் அவரது செயல்பாட்டுக்கு 10க்கு 4 மார்க் வழங்குகிறேன்.
இந்த தொடரில் சாய் சுதர்சனின் செயல்பாட்டுக்கு 5 மார்க் அளிக்கிறேன். அவர் சில இடங்களில் ஏற்றம் காண வேண்டும் என்றாலும் திறமையான வீரராக தெரிகிறார். அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். என்றாலும் அவர் அனைத்து டெஸ்டிலும் விளையாடி இருந்தால், விஷயம் வேறுவிதமாக இருந்திருக்கும்.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், உங்களது அணி தோல்வியை தழுவும் போது, அணியில் இருந்து கழற்றிவிடப்படுவீர்கள். மீண்டும் அணிக்கு திரும்புவீர்கள் என அனைத்தும் நடக்கும். ஆனால் அதன் பிறகு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது கடினம்.
ஆனால் ஒரு வீரராக தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால், நம்மால் நிறைய சாதிக்க முடியும் என அவர் நினைப்பார். எனக்கு எப்போதும் முன்வரிசையில் களம் இறங்கும் இடதுகை பேட்ஸ்மேன்களை பிடிக்கும். சிறப்பாக பேட்டிங் செய்வதற்கான திறன் சுதர்சனிடம் இருக்கிறது. அதனால் தான் அவருக்கு 5 மார்க் கொடுத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.