தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20: இந்திய முன்னணி வீரர் விலகல்..? சாம்சனுக்கு அதிர்ஷ்டம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.;
image courtesy:BCCI
ஆமதாபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றிருந்தன.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு நிலவிய அதிக பனிமூட்டம் காரணமாக மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள், விளையாடுவதற்கு உகந்த சூழல் இல்லை என்று கூறி ஆட்டத்தை ரத்து செய்தனர்.
இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது.
இதற்கிடையே, இந்திய அணியின் முன்னணி வீரரும் துணை கேப்டனுமான சுப்மன் கில் பயிற்சியின்போது கால் பெருவிரலில் காயம் அடைந்துள்ளார். இதனால் அவர் இந்த 4-வது போட்டியில் ஆட மாட்டார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் இருந்தும் அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் அதிர்ஷ்டம் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.