ஆஷஸ் டெஸ்ட் சதத்தை தந்தைக்கு அர்ப்பணித்த கேரி
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களுக்கு ஆட்டமிழந்தது;
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த், பிரிஸ்பேன் ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி அலெக்ஸ் கேரி சதம் விளாசி அசத்தினார்.
ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி சதம் அடித்ததும் வானத்தை நோக்கி பேட்டை உயர்த்தியபடி உணர்ச்சிவசப்பட்டார். அவர், புற்று நோய் பாதிப்பால் கடந்த செப்டம்பர் மாதம் மறைந்த தனது தந்தை கோர்டானுக்கு சதத்தை அர்ப்பணித்தார். பின்னர் அலெக்ஸ் கேரி கூறுகையில், ‘தற்போது நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு வானத்தை நோக்கி ஏன் பார்த்தேன் என்பது உங்களுக்கு தெரியும். நான் கண்ணீர் விடாமல் இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை. உள்ளூர் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் சதம் அடித்தது சிறப்பானதாகும். இந்த சிறப்பான சதத்தை மறைந்த எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.