ஏலம் முடிந்த பிறகும் அழுகையை நிறுத்த முடியவில்லை...கார்த்திக் ஷர்மா நெகிழ்ச்சி

கார்த்திக் ஷர்மாவை வசப்படுத்த 5 அணிகள் போட்டியிட்ட நிலையில் கடைசியில் சென்னை அணி சொந்தமாக்கியது.;

Update:2025-12-18 13:52 IST

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் மினி ஏலத்தில் உள்ளூர் வீரர்கள் கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர் இருவரையும் தலா ரூ.14.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

19 வயதான கார்த்திக் ஷர்மா, ராஜஸ்தானை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன். விக்கெட் கீப்பராக செயல்படக்கூடியவர். சர்வதேச போட்டியில் ஆடாத வீரர் ஒருவர் 14 கோடிக்கு மேல் ஏலம் போனது இதுவே முதல் முறையாகும். அவரை வசப்படுத்த 5 அணிகள் போட்டியிட்ட நிலையில் கடைசியில் சென்னை அணி சொந்தமாக்கியது.

இதனால் உணர்வுபூர்வமான தருணத்தில் திளைக்கும் கார்த்திக் ஷர்மா கூறுகையில், ‘ஏலம் தொடங்கிய போது, என்னை யாரும் எடுக்காமல் விட்டுவிடுவார்களோ என பயந்தேன். பிறகு ஏலத்தில் அணி நிர்வாகிகள் என்னை கேட்டதுடன், தொகை உயர்ந்து கொண்டே போன போது, அழுகை வந்து விட்டது. ஏலம் முடிந்த பிறகும் கூட அழுகையை நிறுத்த முடியவில்லை. மகிழ்ச்சியில் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை. எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாமல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. ஆட்டம் பாட்டம் என்று ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சந்தோஷத்தில் மூழ்கிப்போனோம். டோனியுடன் இணைந்து ஆட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வேன்’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்