சிஎஸ்கே அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி... ஏனெனில் அங்கு தோனி.. - பிரஷாந்த் வீர் நெகிழ்ச்சி
மினி ஏலத்தில் பிரஷாந்த் வீரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14.20 கோடிக்கு வாங்கியது.;
சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் 10 அணிகளின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியினரும் தங்களிடம் இருந்த கையிருப்பு தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட வீரரை குறி வைத்து பல்வேறு வியூகங்களுடன் வந்திருந்தனர். ஏலத்தை மும்பைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்தினார்.
ஏலத்தில் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) உள்நாட்டு வீரர்களுக்கு குறிவைத்தது. அந்த வகையில் சர்வதேச அனுபவம் இல்லாத உள்நாட்டு வீரர்களான இடக்கை சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் பிரஷாந்த் வீர், சிக்சர் அடிப்பதில் வல்லவரான கார்த்திக் சர்மா ஆகியோரை பெரிய தொகைக்கு வாங்கியது.
இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 20 வயதான பிரஷாந்த் வீர் டி20 போட்டிகளில் 167.16 ஸ்டிரைக் ரேட் கொண்டவர். 12 ஆட்டங்களில் 112 ரன்களும், 12 விக்கெட்டும் எடுத்துள்ளார். அவரது தொடக்க விலை ரூ.30 லட்சமாகும். இவரை வாங்க சென்னை - ஐதராபாத் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் சென்னை அணி ரூ.14.20 கோடிக்கு பிரஷாந்த் வீரை வாங்கியது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ள பிரஷாந்த் வீர் கூறுகையில், “ சிஎஸ்கே அணியுடன் இணைவதில் மகிழ்ச்சி. ஏனெனில் அங்கு தோனி இருக்கிறார். பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடுவது எளிதல்ல. அதை சிறப்பாக செய்வதுதான் அவரது ஸ்பெஷல். அவரிடம் இருந்து முடிந்த வரை நிறைய கற்றுக்கொள்வேன். அவரிடம் இருந்து 4-5 சதவீதம் கற்றுக்கொண்டாலும் கூட எனக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.