இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா..? கம்பீர் பதில்

இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்ட் போட்டி 31-ம் தேதி தொடங்குகிறது.;

Update:2025-07-29 14:28 IST

லண்டன்,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனிடையே இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார? என்பது கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் இந்த தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது.

அதன்படி அவர் ஏற்கனவே 3 போட்டிகளில் (1, 3 மற்றும் 4) விளையாடி விட்டார். இதன் காரணமாக அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அவர் களமிறங்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்பீர், "ஜஸ்பிரித் பும்ரா கடைசி டெஸ்டில் ஆடுவாரா? இல்லையா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. யார் விளையாடினாலும் தேசத்துக்காக தங்கள் பணியை சிறப்பாக செய்ய முயற்சிப்பார்கள். எல்லா வேகப்பந்து வீச்சாளர்களும் முழு உடல்தகுதியுடன் உள்ளனர். காயப்பிரச்சினை ஏதும் இல்லை. கடைசி டெஸ்டுக்கான அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்பது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்