இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெற்றிருந்தார்.;
image courtesy:PTI
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் குணமடைந்த அவர் உள்ளூர் தொடர்களில் விளையாடி இழந்தை பார்மை மீட்டெடுத்தார். பின்னர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடினார்.
இருப்பினும் அவரால் முன்பு போல் பந்து வீச முடியவில்லை. அவர் கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்து பல மாதங்களாகிவிட்டன. ஆனால் அவர் தனது சிறந்த பார்முக்கு வரவில்லை. அவர் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டாலும் செயல்பாடு மந்தமாகவே இருந்து வருகிறது. எனவே இந்திய தேர்வுக்குழு அவரை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யவில்லை.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாடும் அளவுக்கு முழு உடற்தகுதியுடன் இல்லை அதனால்தான் அவரை தேர்வு செய்ய முடியாமல் போனதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். முகமது ஷமி, ஐ.பி.எல். தொடருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பை இழந்த அவர் மீண்டும் கம்பேக் கொடுக்கும் முனைப்போடு தற்போது முக்கிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். அதன்படி உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க உள்ளார். வரும் சீசனுக்காக உள்ளூர் போட்டிக்குரிய பெங்கால் அணியின் உத்தேச அணி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முகமது ஷமி பெயரும் இடம் பெற்றுள்ளது.