நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள்...முதலிடத்தில் ‘கோலி’
விராட் கோலி 91 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.;
சென்னை,
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது 85-வது சதமாகும். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரல் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் சதத்தை பூர்த்தி செய்தனர். இதனால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
ரோகித் சர்மா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 91 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். அவர் நியூசிலாந்துக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், வீரேந்திர சேவாக் ஆகியோர் 6 சதங்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து சச்சின், சனத் ஜெயசூர்யா ஆகியோர் 5 சதங்கள் அடித்துள்ளனர்.