சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூசிலாந்து வீரர் ஓய்வு
சமீப காலமாகத் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்தார் டக் பிரேஸ்வெல்;
வெல்லிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டக் பிரேஸ்வெல் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 35 வயதான பிரேஸ்வெல் 28 டெஸ்டில் விளையாடி 74 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அத்துடன் 21 ஒருநாள் மற்றும் இருபது டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
சமீப காலமாகத் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்தார் டக் பிரேஸ்வெல். குறிப்பாக, சமீபத்தில் ஏற்பட்ட விலா எலும்பு காயம் அவரை வெகுவாகப் பாதித்தது. நீண்டகால விலா எலும்பு காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 60 ரன்களை விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரின் பங்களிப்பால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்து அணி இன்று வரை வெற்றி பெற்றதில்லை.