2 நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்: பிட்ச் பராமரிப்பாளர் அதிர்ச்சி

புற்கள் விடப்பட்டதால் பந்து முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகி விட்டது;

Update:2025-12-29 06:51 IST

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இரண்டே நாளில் போட்டி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இரண்டே நாளில் இந்த போட்டி முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பெர்த்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் 2 நாளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மெல்போர்னில் டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிந்தது தொடர்பாக பிட்ச் பராமரிப்பாளர் மேத்யூ பஜ் கூறியதாவது,

ஆடுகளத்தில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் விடப்பட்டதால் பந்து முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகி விட்டது. புற்களை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் பேட்டிங்குக்கு ஓரளவு கைகொடுத்திருக்கும்.

‘டெஸ்டின் முதல் நாளில் 20 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனேன். 2 நாளில் போட்டி முடிந்தது நிச்சயம் ஏமாற்றமே.இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த ஆண்டு சிறந்த ஆடுகளத்தை தயாரிப்பதை உறுதி செய்வோம். அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு டெஸ்ட் போட்டியாக 4 அல்லது 5 நாள் வரை நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்காக பந்துவீச்சுக்கும், பேட்டிங்குக்கும் இடையே சமநிலை இருக்கும் வகையிலான ஆடுகளத்தை வழங்கவே முயற்சிக்கிறோம். என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்