சச்சின், கோலி, சுமித் இல்லை.. ஆல்டைம் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் இவர்தான் - ஹாரி புரூக் புகழாரம்
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஹாரி புரூக்கை பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் முதலிடம் பிடித்தார்.;
image courtesy:PTI
மான்செஸ்டர்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது.
முன்னதாக லார்ட்சில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3-வது போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். இதன் காரணமாக டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சக நாட்டவரான ஹாரி புரூக்கை பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் (முன்பு 2-வது இடம்) மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தார். இதே டெஸ்டில் 11 மற்றும் 23 ரன் வீதம் எடுத்து சொதப்பிய புரூக் 862 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்டைல் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் என்று ஹாரி புரூக் புகழாரம் சூட்டியுள்ளார். அதனால் டெஸ்ட் வரிசையில் ஜோ ரூட்டிடம் முதலிடத்தை இழந்ததில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அனைவரும் முதலிடத்தில் இருக்க விரும்புவார்கள் இல்லையா?. அவர் (ரூட்) ஒரு அற்புதமான வீரர். நான் மகிழ்ச்சியுடன் முதலிடத்தை அவருக்கு கொடுப்பேன். அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவர் 12-13 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். என் கருத்துப்படி, ஜோ ரூட் ஆல்டைம் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்" என்று கூறினார்.