சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை - வில்லியம்சன் பாராட்டு

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார்.;

Update:2025-07-19 18:06 IST

வெலிங்டன்,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா, 2-வது போட்டியில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் அந்த போட்டியில் அவர் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் தனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். அத்துடன் சுப்மன் கில், இந்திய அணியை தலைமை தாங்க தகுதியான கேப்டன் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அவர் (சுப்மன் கில்) அழகாக பதிலளித்திருக்கிறார், இல்லையா? கில்லுக்கு கேப்டன் பதவி நன்றாகப் பொருந்தும் என்று நான் எப்போதும் நினைத்தேன். ஐ.பி.எல். போன்ற தொடர்களில் ஒரு அணியின் கேப்டனாக இருப்பது கொஞ்சம் வித்தியாசமானது என்பதை நான் அறிவேன். அது உங்கள் நாட்டிற்கு கேப்டனாக செயல்படுவதற்கான ஒரு குறுகிய திட்டமாக இருக்கும்.

சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதைப் பார்க்கும்போது வயதை தாண்டிய புத்திசாலித்தனம் இருப்பதாக தெரிகிறது. கேப்டன்ஷிப் இயற்கையாகவே அவர் ஏற்று நடத்தக்கூடிய பொறுப்பாக தெரிகிறது. எனவே அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் வீரரின் தரம் சொல்லாமல் போகும் ஒன்று. அவர் முற்றிலும் உலகத் தரம் வாய்ந்தவர்.

இங்கிலாந்துக்கு வந்து சவாலான டியூக் பந்துகளை எதிர்கொண்ட அவர் ஆதிக்கம் செய்யும் வகையில் பேட்டிங் செய்ததைப் பார்ப்பது அற்புதமாக இருந்தது. அதே சமயம் இந்தத் தொடரில் கேப்டனாக கற்றுக்கொள்ள அவருக்கு நிறைய மதிப்புள்ள பாடங்கள் கிடைக்கும். சுப்மன் கில்லிடம் நாம் ஒரு நல்ல கேப்டனை பார்க்கப் போகிறோம். ஆனால் இது இன்னும் ஆரம்ப நாட்கள்தான்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்