கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஏமாற்றமளித்தது - நாதன் லயன்

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது.;

Update:2025-07-30 08:15 IST

image courtesy: PTI

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. டெஸ்ட் மற்றும் டி20 தொடர் இரண்டையுமே ஆஸ்திரேலிய அணி முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நாதன் லயன், மூன்றாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. ஆடுகளத்தின் தன்மை வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருந்ததால், வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்கிய அணியுடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஏமாற்றமளித்ததாக நாதன் லயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஏமாற்றமளித்தது. ஆனால், அணி நிர்வாகத்தின் முடிவை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது.

சில காரணங்களுக்காக நான் ஏமாற்றமடைந்தேன். எந்த விதமான ஆடுகளங்களிலும் என்னால் நன்றாக பந்துவீச முடியும் என நம்புகிறேன். அதனால், பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஏமாற்றமளித்தது. மிட்செல் ஸ்டார்க் அவரது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவருடன் இணைந்து விளையாட முடியாதது ஏமாற்றமளித்தது. அவருடன் இணைந்து 90 போட்டிகளில் விளையாடியுள்ளேன். அவருடைய 100-வது போட்டியில் நானும் இடம்பெற்று விளையாடியிருந்தால் அது மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனால், அவர் 100-வது போட்டியில் விளையாடும்போது, நான் அவருடன் இருந்தேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது. இடைவேளையின்போது, குளிர்பானங்கள் கொடுக்க ஆடுகளம் நோக்கி சென்றேன். அவருடைய 100-வது போட்டியில் நானும் அங்கம் வகித்தேன் என்று கூறிக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்