ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடக்கிறது.;
வதோதரா,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கழுத்து வலியால் பாதியில் விலகிய கேப்டன் சுப்மன் கில் உடல் தகுதியை எட்டியதால் அணிக்கு திரும்பி இருக்கிறார். 20 ஓவர் உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் ஆடும் முதல் தொடர் இதுவாகும். இதனால் அவர் தனது சிறந்த நிலைக்கு திரும்ப எல்லா வகையிலும் முயலுவார் எனலாம்.
துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் அணியில் இணைந்து இருக்கிறார். அவர்களுடன் லோகேஷ் ராகுலும் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார். ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தங்களது சிறப்பான பார்மை தொடருவார்கள் என்று நம்பலாம். பந்து வீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் வலுசேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னெர் காயத்தில் இருந்து மீண்டாலும் முழு உடல் தகுதியை அடையாததால் மைக்கேல் பிரேஸ்வேல் அணியை வழிநடத்துகிறார். தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் டாம் லாதமும், எஸ்.ஏ.லீக் போட்டியில் ஆடுவதால் கேன் வில்லியம்சனும் இந்த போட்டி தொடரில் இடம் பெறவில்லை. பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா, வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்பி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே, டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிலிப்ஸ், வில் யங் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். பந்து வீச்சில் கைல் ஜாமிசன், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதித்யா அசோக், ஜெய்டன் லெனாக்ஸ் நம்பிக்கை அளிக்கிறார்கள். 23 வயதான ஆதித்யா அசோக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2024-ம் ஆண்டு முதல்முறையாக இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை (3-0) வென்று சாதனை படைத்த நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரில் அத்தகைய வரலாறு படைக்க மும்முரம் காட்டும்.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
நியூசிலாந்து: டிவான் கான்வே, நிக் கெல்லி, வில் யங், டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜாக் போல்க்ஸ், கைல் ஜாமிசன், மைக்கேல் ராய், கிறிஸ்டியன் கிளார்க்.
பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.