வேண்டுமென்றே ஸ்டம்பிங் வாய்ப்பை விட்ட பூரன்.. தந்திரமா..? சூதாட்டமா..?.. ரசிகர்கள் கேள்வி
சர்வதேச லீக் டி20 டி20 தொடரில் இந்த சம்பவம் நடைபெற்றது.;
அபிதாபி,
6 அணிகள் இடையிலான சர்வதேச லீக் டி20 தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் - டெசர்ட் வைப்பர்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த டெசர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மேக்ஸ் ஹோல்டன் 42 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய எம்ஐ எமிரேட்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் டெசர்ட் வைப்பர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டெசர்ட் வைப்பர்ஸ் பேட்டிங் செய்தபோது 16-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை மேக்ஸ் ஹோல்டன் அடித்து ஆட முற்பட்டு கிரீசை விட்டு வெளியேறி சென்றார். இதனை பார்த்து சுதாரித்து கொண்ட ரஷித் கான் வைடாக வீசினார்.
அந்த பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரனுக்கு ஸ்டம்ப்பிங் செய்ய பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் வேண்டுமென்றே ஸ்டம்பிங் செய்யவில்லை. அவர் ஸ்டம்பிங் செய்ய முயற்சிக்க கூட இல்லை. இந்த வீடியோ வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள் நிக்கோலஸ் பூரன் ‘மேட்ச் பிக்சிங்’-ல் (சூதாட்டம்) ஈடுபட்டதாக விமர்சித்தனர்.
ஆனால் இந்த போட்டியில் மேக்ஸ் ஹோல்டன் 42 ரன்கள் அடித்திருந்தாலும் அதற்கு 37 பந்துகள் எடுத்து கொண்டார். இப்படி குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் (113) ஹோல்டன் விளையாடியதால் அவரை அவுட்டாக்க வேண்டாம் என்று பூரன் தந்திரமாக நினைத்தாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இது பேசு பொருளாகி உள்ளது.
ஆனால் இந்த சம்பவம் முடிந்ததும் மேக்ஸ் ஹோல்டன் ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.