டி20 கிரிக்கெட்: ஒரு கேட்ச்சில் தோனியின் வரலாற்று சாதனையை தவறவிட்ட ஜிதேஷ் சர்மா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிதேஷ் சர்மா 4 கேட்ச் பிடித்தார்.;
கட்டாக்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும், ஜிதேஷ் ஷர்மா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 176 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 12.3 ஓவர்களில் 74 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 22 ரன்க்ள் அடித்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 4 கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இணைந்துள்ளார்.
இன்னும் ஒரு கேட்ச் பிடித்திருந்தால் டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மகேந்திரசிங் தோனியின் வரலாற்று சாதனையை அவர் சமன் செய்திருப்பார். தற்போது ஒரு கேட்ச்சில் அந்த மாபெரும் சாதனையை தவறவிட்டுள்ளார்.
அந்த பட்டியல்:
1. தோனி - 5 கேட்ச்
2. தோனி (3 முறை)/தினேஷ் கார்த்திக் (1 முறை)/ ஜிதேஷ் சர்மா (1 முறை) - 4 கேட்ச்