நான் என்ன விரும்புகிறேன் என்பது முக்கியமில்லை.. இந்தியா... - ஹர்திக் பாண்ட்யா பேட்டி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் ஆட்ட நாயகன் விருது வென்றார்.;
கட்டாக்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும், ஜிதேஷ் ஷர்மா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 176 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 12.3 ஓவர்களில் 74 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 22 ரன்க்ள் அடித்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 104 ரன்களுடன் தடுமாறியது. அந்த சமயத்தில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை தூக்கி நிறுத்தினர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர் சிக்சர்களை தெறிக்க விட்டார். 25 பந்துகளில் தனது 6-வது அரைசதத்தையும் நிறைவு செய்து அசத்தினார். கடந்த ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த பாண்ட்யா முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், “நான் என் ஷாட்டுகளை ஆதரிக்க வேண்டியிருந்தது. அதே நேரத்தில் பிட்ச் கொஞ்சம் சவாலாக இருப்பதை உணர்ந்தேன். அந்த சமயத்தில் நீங்கள் கொஞ்சம் தைரியமாக இருக்க வேண்டும். நான் பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் திருப்தி அடைந்தேன்.
பிட்னசை பொறுத்தவரை கடந்த 6-7 மாதங்கள் மிகவும் அற்புதமாக இருப்பதாக உணர்கிறேன். அதன் பின்னணியில் உள்ள கடின உழைப்பை பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதே நேரத்தில் கடந்த 50 நாட்களாக நான் விரும்பக் கூடியவர்களிடமிருந்து வெளியே சென்று என்சிஏவில் நேரத்தைச் செலவிட்டு அனைத்தையும் சரி செய்வதில் உறுதியாக இருந்தேன். இதனால் இந்த முடிவுகள் மிகவும் திருப்தி அளிக்கிறது.
ஒரு கிரிக்கெட் வீரராக, எனது பங்கைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யா என்ன விரும்புகிறார் என்பது முக்கியமல்ல. இந்தியா என்ன விரும்புகிறது என்பதுதான் முக்கியம். எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம், என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன்.
என் வாழ்க்கை முழுவதும், நான் எந்த அணிக்காக விளையாடினாலும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்க முயற்சிக்கிறேன். அதுதான் என்னுடைய மிகப்பெரிய குறிக்கோள். கேசவ் மகராஜ் பந்துவீச்சை டார்கெட் செய்தது திட்டம் கிடையாது. ஆனால் பந்து எனது வட்டத்திற்குள் இருந்தால் அடிப்பேன். எனக்கு எதிராக வாய்ப்பை எடுத்த அவருக்கு எதிராக நானும் வாய்ப்பை எடுத்தேன்.
அது பலனளித்தது. அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம் என்று நினைக்கிறேன். பிட்சை கணக்கிட்டு அவரை அடிக்க முயற்சித்தது வேலை செய்தது. சரியான பவுலர்களை கண்டறிந்து அடிப்பது முக்கியம். அது வேலை செய்யும் போது நன்றாக தெரியும்” என்று கூறினார்.