மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்ட ஆட்டம்.. இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

மகளிர் உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.;

Update:2025-10-17 23:35 IST

image courtesy:ICC

கொழும்பு,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதில் கொழும்புவில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அதபத்து பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சில மணி நேர ஆகியும் மழை நிற்காததால் போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அந்த சூழலில் மழை நின்றதை அடுத்து இந்த போட்டி 20 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. அதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விஷ்மி குனரத்னே 34 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ மிலாபா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 20 ஓவர்களில் 121 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 14.5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகள் ஆன லாரா வால்வார்ட் 60 ரன்களுடனும், தஸ்மின் பிரிட்ஸ் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். லாரா வால்வார்ட் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்