ரஞ்சி கிரிக்கெட்: 182 ரன்னில் சுருண்ட தமிழக அணி
அதிகபட்சமாக வித்யுத் 40 ரன்னும், சந்தீப் வாரியர் 29 ரன்னும் எடுத்தனர்.;
விசாகப்பட்டினம்,
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 4-வது லீக் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழ்நாடு-ஆந்திரா அணிகள் மோதுகின்றன.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய தமிழக அணி, ஆந்திர வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 74.3 ஓவர்களில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 182 ரன்னில் அடங்கியது. அதிகபட்சமாக வித்யுத் 40 ரன்னும், சந்தீப் வாரியர் ஆட்டமிழக்காமல் 29 ரன்னும் எடுத்தனர். ஜெகதீசன் (19 ரன்), பாபா இந்திரஜித் (19 ரன்), கேப்டன் சாய் கிஷோர் (8 ரன்) உள்ளிட்ட மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். ஆந்திரா தரப்பில் பிரித்வி ராஜ் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆந்திரா ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.