ரஞ்சி டிராபி: தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்... முதல் நாள் முடிவில் ஜார்கண்ட் 307/6

தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட், சந்திரசேகர் 2 விக்கெட் வீழ்த்தினர்.;

Update:2025-10-15 18:45 IST

Image Courtesy: @TNCA

கோவை,

இந்தியாவில் உள்நாட்டில் நடக்கும் பிரதான முதல்தர கிரிக்கெட்டான 91-வது ரஞ்சி கோப்பை தொடர் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் ‘எலைட்’ பிரிவில் 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா, பரோடா, நாகாலாந்து, நடப்பு சாம்பியன் விதர்பா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதேபோல் ‘பிளேட்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு ‘எலைட்’ பிரிவுக்கு ஏற்றம் பெறும்.

இந்நிலையில், தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் ஜார்கண்ட்டை கோவையில் சந்தித்தது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஜார்கண்ட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து ஜார்கண்டின் தொடக்க வீரர்களாக ஷிகர் மோகன் மற்றும் ஷரன்தீப் சிங் களம் கண்டனர்.

இதில் ஷிகர் மோகன் 10 ரன்னிலும், ஷரன்தீப் சிங் 48 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த குமார் சூரஜ் 3 ரன், விராட் சிங் 28 ரன், குமார் குஷாரா 11 ரன், அனுகுல் ராய் 12 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து கேப்டன் இஷான் கிஷன் மற்றும் ஷகில் ராஜ் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் இஷான் கிஷன் சதமும், ஷகில் ராஜ் அரைசதமும் அடித்து அசத்தினர். இறுதியில் முதல் நாள் முடிவில் ஜார்கண்ட் அணி 90 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 307 ரன்கள் குவித்துள்ளது. ஜார்கண்ட் தரப்பில் இஷான் கிஷன் 125 ரன்னுடனும், ஷகில் ராஜ் 64 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட், சந்திரசேகர் 2 விக்கெட் வீழ்த்தினர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்