ரஞ்சி கோப்பை: ஜார்கண்டுக்கு எதிராக தமிழக அணி தடுமாற்றம்

ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது.;

Update:2025-10-17 02:28 IST

image courtesy:twitter/@TNCACricket

கோவை,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-ஜார்கண்ட் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 173 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி வரிசையாக விக்கெட்டுகளை தாரை வார்த்தது. சச்சின் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ஜெகதீசன் 3 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 9 ரன்னிலும், பாபா இந்திரஜித் ரன் எதுவுமின்றியும், ஆந்த்ரே சித்தார்த் 2 ரன்னிலும் நடையை கட்டினர்.

ஜார்கண்ட் அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய தமிழக அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 11 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 18 ரன் எடுத்து அடித்துள்ளது. அம்ப்ரிஷ் ரன் எதுவும் எடுக்காமலும், ஷாருக்கான் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஜார்கண்ட் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜதின் பாண்டே 3 விக்கெட்டும், சஹில் ராஜ் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்