மைக் ஹெசன் பயிற்சியளித்தபோது ஆர்சிபி எதையும் வெல்லவில்லை.. பாக்.மட்டும் எப்படி சாதிக்கும்..? - ஸ்ரீகாந்த் விமர்சனம்
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.;
சென்னை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் இன்று துபாயில் நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 ஸ்பின்னராக திகழும் முகமது நவாஸ், சுபியன் முஹிம், சைம் அயூப், அப்ரார் அகமது ஆகியோர் சுழலுக்கு சாதகமான துபாயில் இந்தியாவுக்கு சவாலைக் கொடுப்பார்கள் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் மைக் ஹெசன் பயிற்சியளித்தபோது, ஆர்சிபி அணி எதையும் வெல்லவில்லை என்று இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அப்படி இருக்கையில் அவரது பயிற்சியில் பாகிஸ்தான் எப்படி சிறப்பாக செயல்படப் போகிறது? என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அவர் (மைக் ஹெசன்) தொடர்ந்து தைரியமான அறிவிப்புகளை வெளியிடுகிறார். அவர் பயிற்சியளித்த எந்த அணியும் ஒருபோதும் சிறப்பாக செயல்படவில்லை. அவர் ஆர்சிபியை பயிற்சியளித்தபோது, அவர்கள் அப்போது எதையும் வெல்லவில்லை. அவரது பயிற்சியில் பாகிஸ்தான் எப்படி சிறப்பாக செயல்படப் போகிறது? அவர் வீரர்களிடம் தைரியமாக பேட்டால் அடிக்கச் சொல்லியிருப்பார்.
ஓமனுக்கு எதிராக சைம் அயூப் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தபோது, அது மைக் ஹெஸ்ஸனின் தாக்கம் என்று தெரிந்தது. மைக் ஹெஸ்சனும் அப்படித்தான் பேட்டிங் செய்திருப்பார். பாகிஸ்தான் ஒரு சராசரிக்கும் கீழான அணி. ஷாஹீன் அப்ரிடி கூட அபாயகரமான வீரராக இல்லை. ஆமாம், அவர்கள் 34-35 வயதுக்கு மேற்பட்ட வீரர்களால் நிரம்பிய ஓமன் அணியை வென்றார்கள். அந்த அணி முழுக்க அங்கிள்கள் நிரம்பியது. எனவே, அவர்களை வெல்வது எதையும் காட்டவில்லை.
எனது வயதில், இப்போது கூட நான் ஓமன் அணிக்கு கேப்டனாக இருக்க முடியும். அவர்களின் பந்துவீச்சு ஓமன் அங்கிள்களுக்கு எதிராக நன்றாகத் தோன்றியது. ஆனால், இந்திய வீரர்களுக்கு எதிராக அது எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும். ஸ்கொயர் லெக் திசையில் மட்டும் அடிக்கும் பலத்தை கொண்ட முகமது ஹாரிஸ் இந்தியாவின் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக அவுட் ஆவார். பகார் ஜமனை குல்தீப் யாதவ் பார்த்துக் கொள்வார். இந்திய பேட்டிங் வரிசை வேறு தரத்தில் உள்ளது. பேட்டிங்கில் இரு அணிகளுக்கு இடையே ஒப்பிடவே முடியாது” என்று கூறினார்.