'இவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்': மாத்ரேவை பாராட்டிய மும்பை வீரர்

பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் குவித்தார்.;

Update:2025-05-04 16:01 IST

Image Courtesy: @IPL / @ChennaiIPL

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் 62 ரன், பெத்தேல் 55 ரன், ஷெப்பர்ட் 53 ரன் எடுத்தனர்.

சென்னை தரப்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக மாத்ரே 94 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் என்கிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ரொமாரியோ ஷெப்பர்ட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும் இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 48 பந்தில் 94 ரன்கள் குவித்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய டி20 அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரருமான சூர்யகுமார் யாதவ், ஆயுஷ் மாத்ரேவின் இந்த ஆட்டம் குறித்து பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ஆயுஷ் மாத்ரேவின் இன்னிங்ஸ் அதிரடியாக ஆடும் நோக்கத்துடனும், தைரியத்துடனும், நெருப்பு போன்றும் இருந்தது. இவர்தான் எதிர்காலம், இவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்