வெற்றிக்கு போராடிய ரிக்கல்டன்.. மெய்சிலிர்க்க வைத்த மேக்ஸ்வெல்லின் கேட்ச்... வீடியோ வைரல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேக்ஸ்வெல் இந்த கேட்சை பிடித்தார்.;

Update:2025-08-10 21:33 IST

டார்வின்,

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டார்வினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டிம் டேவிட் 52 பந்துகளில் 83 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மபாகா 4 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ரிக்கல்டன் 71 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பென் துவார்ஷியூஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வேளையில் தொடக்க ஆட்டக்காரர் அன ரிக்கல்டன் அணியின் வெற்றிக்காக போராடினார். அதில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் ரிக்கல்டன் இருந்ததால் அந்த அணிக்கு வெற்றி மேல் நம்பிக்கை இருந்தது.

அந்த ஓவரின் முதல் பந்தில் ரன் எதுவும் அடிக்காத அவர் 2-வது பந்தை அதிரடியாக சிக்சரை நோக்கி அடித்தார். இது சிக்சருக்கு சென்று விடும் அனைவரும் நினைத்தனர். ஆனால் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மேக்ஸ்வெல் அதனை அந்தரத்தில் பாய்ந்து பிடித்தார். தரையில் கால் படும் முன் பந்தை பவுண்டரி எல்லைக்கு உள்ளே தூக்கி வீசிய அவர், தரை இறங்கியதும் பவுண்டரிக்கு வெளியே இருந்து தாவி அற்புதமாக கேட்ச் பிடித்தார். இது அங்கிருந்த ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ரிக்கல்டன் அதிருப்தியுடன் வெளியேறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்