ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம் - முன்னாள் வீரர் கருத்து
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.;
Image Courtesy: @ICC
லண்டன்,
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வுக்கு பிறகு இளம் வீரர்களை கொண்ட அணி இங்கிலாந்தில் சாதித்து காட்டியது.
தொடரை இழக்காமல் சமன் செய்தது பாராட்டுதலுக்குரியதாகும். சுப்மன்கில் கேப்டனாக பொறுப்பேற்று முதல் தொடரிலேயே சாதித்து காட்டினார். மேலும் பேட்டிங்கிலும் அவர் அபாரமாக செயல்பட்டார். 5 டெஸ்டில் 754 ரன்கள் (10 இன்னிங்ஸ்) குவித்தார். சராசரி 75.40 ஆகும். இதில் 4 சதம் அடங்கும். அதிகபட்சமாக 269 ரன் குவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக்கலாம் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கருத்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக கூறியதாவது,
ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக சுப்மன் கில்லை தேர்வு செய்ய தேர்வுக்குழு பரிசீலனை செய்யலாம். ரோகித் சர்மா, விராட் கோலி ஒரு நாள் போட்டியில் விளையாட தயாராக உள்ளனர்.
ஆனால், அவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விஷயங்கள் தேர்வுக் குழுவை பொறுத்தது.ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வுக்குழு விரும்பினால் சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்யலாம். இதுவே சரியான நேரமாகும்.
சுப்மன் கில் அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராவார். 2-வது டெஸ்டில் அவர் குவித்த 269 ரன் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு ரன்னும் முக்கியமானது என்பதை அவர் அந்த டெஸ்டில் உறுதிப்படுத்த விரும்பினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.