ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா... கேப்டன் மார்க்ரம் கூறியது என்ன..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா இழந்தது.;

Update:2025-08-17 23:51 IST

image courtesy:PTI

கெய்ன்ஸ்,

எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது . இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி கெய்ன்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 53 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து173 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62 ரன்கள் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகவும் டிம் டேவிட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தொடரில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் கூறுகையில், “கிரிக்கெட்டுக்கு இது சிறந்த ஆட்டம். இறுதியில், துரதிர்ஷ்டவசமாக தோல்விக்குரிய அணியாகி விட்டோம். 172 ரன்கள் போதுமான ஸ்கோர் அல்ல. ஆனாலும் பந்து வீச்சில் கடைசி வரை போராடிய விதம் பெருமை அளிக்கிறது. இந்தத் தொடரிலிருந்து சில நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டிவால்ட் பிரேவிஸ் தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் தற்போது ஆடுவது போன்று 22 வயதில் நிறைய பேர் ஆடியதில்லை. உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த திறமை இருக்கிறது. அவர் மிகவும் சிறப்பு வாய்ந்த வீரர். மேலும் அவரது ஆட்டத்தில் மிகவும் கடினமாக உழைக்கிறார். நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம், இந்தத் தொடரில் இருந்து நாங்கள் எடுக்க வேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளம். ஆனால் தொடரை இழந்தது ஒருபோதும் சிறந்ததல்ல” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்