இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்: தொடரை முழுமையாக வென்று இந்தியா அசத்தல்

இலங்கை அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது.;

Update:2025-12-30 23:19 IST

Image Courtacy: ICCTwitter

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் இந்திய அணி தடுமாறிய நிலையில் கேப்டன் ஹனுமந்த்பிரீத் கவுரின் அதிரடி ஆட்டத்தால் 175 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹனுமந்த்பிரீத் கவுர் 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இலங்கை அணியின் சார்பில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாசினி பெரேரா 65 ரன்களும், இமிஷா துலானி 50 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை (5-0) முழுமையாக கைப்பற்றி இந்திய மகளிர் அணி அசத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்