டி20 கிரிக்கெட்: பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றுவது ஏன்..? கம்பீர் விளக்கம்
ஆக்ரோஷமான அணியாக பெயர் எடுப்பதையே விரும்புகிறோம் என்று கம்பீர் கூறியுள்ளார்.;
image courtesy:PTI
மும்பை,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கான்பெர்ராவில் நடந்த 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், கோல்டுகோஸ்டில் நடந்த 4-வது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் கடைசி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற முதலே டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை நிலையாக இல்லாமல் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களை தவிர மிடில் வரிசையில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றுவது ஏன்? என்பதற்கான காரணம் குறித்து இந்திய அணியிம் தலைமை பயிற்சியாளர் ஆன கவுதம் கம்பீர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இலங்கை தொடரில் இருந்து தற்போது வரை டி20 கிரிக்கெட்டில் அடிக்கடி பேட்டிங் வரிசையை மாற்றுகிறேன். என்னை கேட்டால் பேட்டிங் வரிசை மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயம். இந்த வடிவிலான கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களை தவிர மற்ற இடங்கள் நிலையானது அல்ல. 3-வது வரிசையில் இருந்து சூழலுக்கு தகுந்தபடி மாற்ற வேண்டும். அதற்கு ஏற்ப வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்.
டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு ரன்கள் எடுக்கிறோம் என்பது பொருட்டல்ல. எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதே முக்கியம். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. இது 120 பந்துகள் கொண்ட போட்டி. ஒவ்வொரு பந்திலும் நம்மால் முடிந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். எங்கள் அணியின் பேட்டிங் வரிசையை ஆக்ரோஷமாக இருக்கிறது என சொல்கிறார்கள்.
ஆனால் பேட்டிங்கை விட பந்து வீச்சுதான் ஆக்ரோஷமாக உள்ளது என்று நான் சொல்வேன். ஜஸ்பிரித் பும்ராவை ‘பவர்-பிளே’யில் 3 ஓவர்களை வீச வைப்பதும் ஆக்ரோஷமான அணுகுமுறையாகவே பார்க்கிறேன். நாங்கள் பேட்டிங்கில் மட்டும் ஆக்ரோஷமாக இருக்க விரும்பவில்லை. ஒட்டுமொத்தத்தில் ஆக்ரோஷமான அணியாக பெயர் எடுப்பதையே விரும்புகிறோம். இந்த யுக்தி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் எங்களுக்கு நன்றாக கைகொடுத்தது” என்று கூறினார்.