டி20 உலகக்கோப்பை 2026: 5 முன்னணி வீரர்களை ஒப்பந்தத்தில் சேர்த்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்
டி20 உலகக்கோப்பைக்கு அணியை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்து வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.;
image courtesy:PTI
வெலிங்டன்,
10-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றிருப்பதும் அடங்கும். முந்தைய உலகக் கோப்பை போன்றே அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றை எட்டும். போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இந்த தொடருக்கு அணியை வலுப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி அந்த அணியின் முன்னணி நட்சத்திரங்களான பின் ஆலன், டெவன் கான்வே, லாக்கி பெர்குசன், டிம் சீபர்ட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை சாதாரண ஒப்பந்தத்தில் (casual contracts) சேர்த்துள்ளது.
ஒப்பந்தத்தின் கீழ், இந்த ஐந்து வீரர்களும் முழுநேர ஒப்பந்தங்களில் உள்ள வீரர்கள் போல நியூசிலாந்து வாரியம் தேர்வு செய்யும் தொடர்களில் விளையாட வேண்டும். அவர்களும் இதற்கு சம்மதித்துள்ளனர். டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடர்களில் இவர்களை நியூசிலாந்து வாரியம் தேர்வு செய்யும் பட்சத்தில் அவர்கள் கண்டிப்பாக விளையாட வேண்டும். இருப்பினும் வில்லியம்சன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.