டி20 உலகக்கோப்பை: இந்திய வீரர்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - கம்பீர் அறிவுரை
டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்த தொடருக்கான சரியான இந்திய அணியை கண்டறிவதில் தலைமை பயிற்சியாளர் ஆன கவுதம் கம்பீர் இப்போதே தீவிரமாகா இறங்கியுள்ளார்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு தயாராக இந்திய வீரர்கள் உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:- “இந்திய அணி வீரர்கள் கலந்துரையாடும் ஓய்வறை மிகவும் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறது. அதை நாங்கள் அப்படியே பராமரிக்க விரும்புகிறோம். அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது.
வீரர்கள் திடமான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். இப்போது இருப்பதை விட இன்னும் வேகமாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆட்டத்தில் அழுத்தமான சூழல் வரும் போது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். எனவே வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருப்பதன் அவசியத்தை உணர்ந்திருப்பார்கள் என நம்புகிறேன். நாங்கள் விரும்பும் நிலையை எட்டுவதற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன” என்று கூறினார்.