டெஸ்ட் கிரிக்கெட்: 2-வது இங்கிலாந்து கீப்பராக மாபெரும் சாதனை படைத்த ஜேமி சுமித்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜேமி சுமித் மொத்தம் 434 ரன்கள் அடித்தார்.;
image courtesy:ICC
லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஹாரி புரூக் (111 ரன்), ஜோ ரூட் (105 ரன்) ஆகியோர் சதமடித்தும் பலனில்லை. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான ஜேமி சுமித் மொத்தம் 434 ரன்கள் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த 2-வது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. அலெக் ஸ்டீவர்ட் - 465 ரன்கள்
2. ஜேமி சுமித் - 434 ரன்கள்
3. லெஸ் அமெஸ் - 417 ரன்கள்
4. ஜானி பேர்ஸ்டோ - 387 ரன்கள்