டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த சுப்மன் கில்
இந்த சாதனை பட்டியலில் விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளார்.;
image courtesy:BCCI
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 2 ரன்களில் விரைவில் ஆட்டமிழந்தார். அடுத்து சாய் சுதர்சன் களமிறங்கினார். இந்திய அணி தடுப்பாட்டத்திலேயே கவனம் செலுத்தியது. இதனால் ரன் ரேட் ஆமை வேகத்தில் நகர்ந்தது. சிறிது நேரம் நிலைத்து விளையாடிய கே.எல். ராகுல் 14 ரன்களில் அவுட்டானார். பின்னர் கேப்டன் சுப்மன் கில் வந்தார்.
தற்போது வரை இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் அடித்துள்ளது. சாய் சுதர்சன் 25 ரன்களுடனும், சுப்மன் கில் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இப்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிமுகம் ஆன சுப்மன் கில் ரன் குவிப்பில் அசத்தி வருகிறார். இந்த தொடரில் இதுவரை 737 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 655 ரன்களுடன் விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளார்.