அந்த காரணத்தினால்தான் எனக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை - குல்தீப் யாதவ்
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது.;
துபாய்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் பல முன்னாள் வீரர்கள் தலைமை பயிற்சியாளர் கம்பீரை விமர்சித்தனர். ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சன் கொண்ட அவர் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலைக் கொடுப்பார். எனவே இங்கிலாந்தில் அவர் விளையாட வேண்டும் என்று அனைத்து முன்னாள் வீரர்களும் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் பேட்டிங்கை ஆழப்படுத்துவதற்காக ஜடேஜா, சுந்தரை தேர்ந்தெடுத்த கம்பீர் அவரை தொடர் முழுவதும் பெஞ்சில் அமர வைத்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் தொடர் முழுவதும் பெஞ்சில் அமர்வாய் என்று கம்பீர் தம்மிடம் ஆரம்பத்திலேயே தெரிவித்து விட்டதாக குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு: “தொடர்பு தெளிவாக இருந்தது. சில நேரங்களில் நான் விளையாட முடியும் என்று நினைத்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பேட்டிங் ஆழம் அல்லது அணி சேர்க்கை காரணமாக, எனக்கு இடம் கிடைக்கவில்லை. கவுதம் பாய் (பயிற்சியாளர்) அதைப் பற்றி நேரடியாகச் சொன்னார். இது திறமை அல்லது பேட்டிங் பற்றியது அல்ல, ஆனால் சூழ்நிலைகள் காரணமாக அணி அமைப்பைப் பற்றியது.
நான் என் நேரத்தை ரசித்தேன், நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் விளையாடாதபோது கவனிப்பதன் மூலம் மேலும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த வீரராக மாறுவீர்கள். மற்றவர்களைக் குறை கூறுவது எளிது, ஆனால் உங்கள் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைச் சரிசெய்து மேம்படுத்துவது கடினம். சவால்கள் எப்போதும் இருக்கும்” என்று கூறினார்.